Home இலங்கை பல ஆண்டுகளாக முடிக்கப்படாத வீடுகள்! நிதியை கோரி கண்டாவளை மக்கள் போராட்டம்

பல ஆண்டுகளாக முடிக்கப்படாத வீடுகள்! நிதியை கோரி கண்டாவளை மக்கள் போராட்டம்

0
image

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்கள் சிலர், 2018 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்திற்கான மீதமுள்ள நிதியை வழங்குமாறு வலியுறுத்தி இன்று (04) கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மக்கள் கருத்து தெரிவிக்கையில், 

 

அப்போதைய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதால், வீடுகளை முழுமையாகக் கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறினர்.

இதனால், தங்களது நகைகளை அடகு வைத்து சொந்த நிதியில் வீடுகளை ஓரளவு பூர்த்தி செய்து தற்போது வசித்து வருவதாகவும், இருப்பினும் திட்டத்தின் மீதமுள்ள நிதி இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனுடன் தங்களையும் இணைத்து, தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய வீடமைப்புத் திட்டத்தின் மீதமுள்ள நிதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தின் நிறைவில், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரனிடம் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

Source: https://samugammedia.com/houses-that-havent-been-completed-for-many-years-people-protest-asking-for-funds-1785835584

NO COMMENTS

Exit mobile version