தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து சட்டவிரோதமாக நாட்டுக்குக் கடத்திவரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண், பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL 403 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்ற அவரை, விமான நிலைய சுங்க அதிகாரிகளும் சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது, அவரது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான மலர்ச் செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1993 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, தாவரங்களையோ அல்லது அவற்றின் பகுதிகளையோ இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் வழங்கிய செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
மேலும், ஏற்றுமதி செய்யும் நாட்டினால் வழங்கப்படும், பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகள் அற்றவை என்பதை உறுதிப்படுத்தும் தாவர தனிமைப்படுத்தல் சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறி தாவரங்களை இறக்குமதி செய்வது சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானதும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண் பயணிக்கு தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
