Home இலங்கை பாடல் பாடியதால் கைது இல்லை; விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பதிவே காரணம் – நீதி அமைச்சர்...

பாடல் பாடியதால் கைது இல்லை; விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பதிவே காரணம் – நீதி அமைச்சர் விளக்கம்

0
image

கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் தான்  கைது செய்யப்பட்டார்.  பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக்கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது  என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை  நிறைவேற்றுவோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்து அதற்கு பதிலாக புதிய சட்டமொன்றை இயற்றுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன. இன்னும் ஓரிரு மாதங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

மேடையில் பாடல் பாடியதற்காக தமிழ் இளைஞர் கைது செய்யப்பட்டதாக எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஒருவர் சபையில் குறிப்பிட்டார்.இது முற்றிலும் தவறு. 

விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்கள் ஊடாக பகிர்ந்த காரணத்தால் தான் இவர் கைது செய்யப்பட்டார். நாட்டில் இன்றும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் தான் உள்ளது. இந்த இளைஞனுக்கு இன்னும் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆகவே நீதிமன்றத்தை நாடி பிணைப்பெற்றுக்கொள்ள முடியும். பேச்சு சுதந்திரம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முறையற்ற வகையில் செயற்பட கூடாது.

பயங்கரவாதம் தொடர்பான 2011 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் பிரகாரமே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பேச்சுரிமை என்பது வடக்குக்கும், தெற்குக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது. தமிழ், முஸ்லிம் என்பதால் சட்டம் குறைவாகவும், சிங்களம் என்பதால் சட்டம் அதிகமாகவும் வழங்கப்படவில்லை.

 

சுரேஷ் சலே 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட போது எவரும் அவரை நினைக்கவில்லை. சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவில்லை, முள்ளங்கியும், சோறும் சாப்பிடுவதாக குறிப்பிடவில்லை.  தீ வைத்துக் கொள்வதாக குறிப்பிடவில்லை, தாய், மனைவி என்று வரும் வரவில்லை. கோட்டபய ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்தவுடன் அனைவரும் கலக்கமடைந்து வெளியில் வந்துள்ளார்கள்.

 

90 நாட்கள் சலேவுக்கு நல்ல சாப்பாடு தான் கிடைத்தது. கோட்டாவுக்கு பயணத்தடை விதித்த பின்னரா சோறும், முள்ளங்கியும் கிடைத்தது? 

கோட்டை  ரயில் நிலையம் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தார்கள். 20 பேர்கூட அங்கு இருக்கவில்லை. சுரேஷ் சலேவுக்காக இவர்கள் இன்று ஒன்றிணையவில்லை. எப்படியாவது போராடி விசாரணைகளை சலேவுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் சென்றால் பிரதான சூத்திரதாரி வெளிப்படுவார் என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். அதற்காகவே திணறுகிறார்கள்  எனத் தெரிவித்தார்

Source: https://samugammedia.com/no-arrest-for-singing-a-song-the-post-encouraging-the-liberation-tigers-is-the-reason–justice-ministers-explanation-1781058919

NO COMMENTS

Exit mobile version