யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் இராஜேஸ்வரி வித்தியாலயத்திற்கு முன்பாக நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட நன்னீர் கிணறு, சூழலியல் மேம்பாட்டு அமைப்பினரால் (சூழகம்) சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிணறு நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத நிலையில், முட்பற்றைகள் அடர்த்தியாக வளர்ந்து பற்றைக்காடு போன்று காட்சியளித்துள்ளது.
புங்குடுதீவு ஜே/25 கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் (J/25 RDS) வேண்டுகோளுக்கிணங்க, சூழகம் அமைப்பின் 40,000 ரூபா நிதியுதவியுடன் கிணற்றை முழுமையாக சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக சூழகம் அமைப்பின் உப செயலாளர் ராஜேந்திரம் கஜேந்திரன் 25,000 ரூபா நிதியையும், சூழகம் அமைப்பின் செயலாளரும் வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் 15,000 ரூபா நிதியையும் வழங்கியுள்ளனர்.
அத்துடன், கிணற்றுக்கு அருகில் காணப்பட்ட சிறிய குளமும் துப்பரவு செய்யப்பட்டு, அப்பகுதியின் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிரமதானப் பணியில் கிராம சேவகர் ச. சிறீதரன் (நிமால்), ஜே/25 கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் கருணாகரன் குணாளன், உப தலைவர் நா. சண்முகம், உறுப்பினர் இந்திரன் உள்ளிட்ட பல பொதுமக்களும் இணைந்து கொண்டனர்.
நீண்ட காலமாக பராமரிப்பின்றி காணப்பட்ட நன்னீர் கிணறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி சுத்தப்படுத்தப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
