Home இலங்கை புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசி தட்டுப்பாடு: விசாரணை நடத்துமாறு கோரிக்கை

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசி தட்டுப்பாடு: விசாரணை நடத்துமாறு கோரிக்கை

0
image

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய தடுப்பூசி மருந்துகளின் தட்டுப்பாடு மற்றும் அவற்றின் இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கவலை வெளியிட்டுள்ளார்.

கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பின்னர் புற்றுநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக வழங்கப்படும் G-CSF எனப்படும் தடுப்பூசி மருந்தின் 1 இலட்சத்து 90 ஆயிரம் பாட்டில்கள் அரசாங்க மருந்தகக் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த மருந்துகள் உரிய லேபிள் வழிகாட்டல்கள் இன்றி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாகவும், இதனால் அவற்றை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், புற்றுநோயாளிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு மருந்தை நாட்டிற்கு இறக்குமதி செய்யும்போது தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) அனுமதி, தரச்சான்றிதழ்கள் மற்றும் லேபிள் தொடர்பான பரிசோதனைகள் உள்ளிட்ட நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், சுமார் 250 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் உரிய லேபிள்கள் இன்றி சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமை, மருந்து ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பாரிய குறைபாடுகள் காணப்படுவதை எடுத்துக்காட்டுவதாக விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த இறக்குமதி தொடர்பான முறையான அனுமதிகள், தரச்சான்றிதழ்கள் மற்றும் லேபிள் விபரங்களை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் வெளிப்படுத்தாமல் உண்மைகளை மறைப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மருந்துப் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மற்றும் NMRA தலைவர் தெரிவித்துள்ள போதிலும், வைத்தியசாலைகளில் போதுமான அளவு G-CSF தடுப்பூசிகள் கிடைக்காத நிலை தொடர்வதாகவும், இதனால் புற்றுநோயாளிகளுக்கு தேவையான முழுமையான மருந்தளவை வழங்குவதில் வைத்தியர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலை சுகாதாரத் துறையில் வெளிப்படைத்தன்மையற்ற நிர்வாகத்தை வெளிப்படுத்துவதாகவும், மருந்துக் கொள்முதலில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் உரிய லேபிள் உள்ளிட்ட தரத் தகவல்கள் இல்லாத மருந்துகளின் விநியோகம் நோயாளிகளின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், கடந்த கால ஆட்சிக் காலத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சில அதிகாரிகள் தற்போதும் முக்கிய பதவிகளில் நீடிப்பதாக விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணையை முன்னெடுத்து, குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், புற்றுநோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், தரமான மற்றும் பாதுகாப்பான மருந்துகளை உரிய முறையில் கொள்வனவு செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Source: https://samugammedia.com/essential-vaccine-shortage-for-cancer-patients-request-to-conduct-an-inquiry-1789903582

NO COMMENTS

Exit mobile version