Home இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதிய சிக்கல்களை விரைவில் தீர்க்கவும்! ஜனாதிபதி உத்தரவு

புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதிய சிக்கல்களை விரைவில் தீர்க்கவும்! ஜனாதிபதி உத்தரவு

0
image

வெளிநாட்டில் பணிப்புரியும் ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை இம்முறை வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு மற்றும் 2027 வரவுசெலவுத் திட்டத்திற்கு முந்தைய கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இக்கலந்துரையாடல் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 

தற்போது நாட்டுக்கு வெளிநாட்டு செலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறைகளில் ஒன்றாக விளங்கும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்காக, மிகவும் முறையான ஓய்வூதியத் திட்டமொன்றின் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். 

சுற்றுலாத் துறை சார்ந்த முன்மொழிவுகளை மாவட்ட மட்டத்தில் மிகவும் செயற்திறனுடன் முன்னெடுப்பதற்காக, அந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களுக்கான நிதி இருப்புக்கு நேரடியாக வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

இதன் மூலம், மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலாத் குழுக்களின் சிறந்த ஒருங்கிணைப்புடன் சம்பந்தப்பட்ட சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை, சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். 

ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாகச் செயல்படுவதற்குப் பதிலாக, ஒரு பொதுவான திட்டத்தின் கீழ் செயல்படுவதன் மூலம் நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Source: https://samugammedia.com/quickly-resolve-the-pension-issues-of-migrant-workers-presidential-order-1784264259

NO COMMENTS

Exit mobile version