கந்தளாயில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்பட்டு வந்த இரண்டு தனியார் பேருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கந்தளாய் பொலிஸாரால் நேற்று (12) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கண்டியிலிருந்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த இரண்டு பேருந்துகளும், கந்தளாய் போட்டான்காட்டு சந்தியில் வைத்து பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, பேருந்துகளில் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தமை பொலிஸாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு பேருந்துகளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், அவற்றின் சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதிகள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சாரதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
