மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தை வெள்ளிக்கிழமை (14.08.2026) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த தொழில் சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 20 இற்கும் மேற்பட்ட பிரபல தொழில் வழங்கும் நிறுவனங்கள், மற்றும் கல்வி வழங்கும் நிறுவனங்கள், பங்குபற்றியிருந்ததோடு, அவர்களால் வழங்கப்படும் தொழில்வாய்ப்புகள் மற்றும் தொழிற்பயிற்சிகள் தொடர்பான தெளிவுடல்களையும் வழங்கியிருந்தனர்.
இதன்போது தொழில் வாய்ப்புகள், தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்காக சுமார் 200 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் பங்குபற்றியிருந்ததுடன், தொழில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு ஆர்.பி.ல்.முறைமை ஊடாக என்.பி.கியூ தர சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகளும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.
பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரவீந்திரனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த தொழில் சந்தை நிகழ்வில் மாவட்ட செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.கிருபானந்தராஜா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Source: https://samugammedia.com/mega-job-fair-held-in-manmunai-south-eruvilpattu-1786783109
