Home இலங்கை மதவளசிங்கன்குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் – ரவிகரன் எம்.பி களஆய்வு

மதவளசிங்கன்குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் – ரவிகரன் எம்.பி களஆய்வு

0
image

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணைந்த களஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், வனவளத் திணைக்களம், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் காணிகளுக்குரிய பொதுமக்கள் ஆகியோர் இணைந்து கடந்த 15ஆம் திகதி குறித்த பகுதிக்கு நேரில் சென்று களஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, கடந்த 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் மதவளசிங்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் மக்களுக்கு உப உணவுப் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட காணிகள் தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக காணிகளுக்குரிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் பொதுமக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து, கடந்த 15.05.2026 அன்று நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மதவளசிங்கன்குளம் பகுதியில் உப உணவுப் பயிர்ச்செய்கைக்காக மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் காணிகளை நேரில் பார்வையிட்டு, அவற்றை விடுவிப்பது தொடர்பில் வனவளத் திணைக்களம், பிரதேச செயலகம், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் காணிகளுக்குரிய மக்கள் இணைந்து களஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த 15.09.2026 அன்று மதவளசிங்கன்குளம் பகுதிக்கு நேரில் சென்ற அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இணைந்த களஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த களஆய்வின் அடிப்படையில், மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://samugammedia.com/encroachments-in-madhavalsingankulam-by-the-forest-department–mp-ravikaran-inspects-1789636893

NO COMMENTS

Exit mobile version