Home இலங்கை மதுபானப் போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம்: டிஜிட்டல் முறையிலும் குறையாத செலவு

மதுபானப் போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம்: டிஜிட்டல் முறையிலும் குறையாத செலவு

0
image

மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் தற்போது பெருமளவில் டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்டாலும், அதற்கான செலவில் எந்தக் குறைப்பும் ஏற்படவில்லை என்பது அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு மதுபான மற்றும் பீர் உற்பத்தி நிறுவனங்களின் போத்தல்களில் காகித பாதுகாப்பு ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதால், அவை நேரடியாக போத்தலிலேயே டிஜிட்டல் முறையில் அச்சிடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா, பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டத்தின் செயல்திறன் மற்றும் அதன் மூலம் கள்ள மதுபான விற்பனையை எவ்வளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சுங்கவரி பிரதி ஆணையாளர் எம். ஜயந்த சில்வா, பாதுகாப்பு ஸ்டிக்கர் திட்டம் 2022ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், தற்போதைய சேவை வழங்குநரின் ஒப்பந்தம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியுடன் நிறைவடைவதால் புதிய டெண்டர் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், 1,000 பாதுகாப்பு ஸ்டிக்கர்களுக்கு 5.99 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படுவதாகவும், துறைமுக மற்றும் தீர்வைக் கட்டணங்களுடன் மொத்தச் செலவு 7.99 அமெரிக்க டொலர்களாக உயர்வதாகவும் அவர் கூறினார்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களில் ஒரு நிறுவனத்தின் உற்பத்தி வேகம் அதிகமாக இருப்பதாலும், மற்றொரு நிறுவனத்தின் போத்தல்கள் குளிரூட்டப்பட்ட நிலையில் இருப்பதால் அவற்றில் காகித ஸ்டிக்கர்களை ஒட்ட முடியாத சூழல் காணப்படுவதாகவும், இதன் காரணமாக அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளில் பாதுகாப்பு அடையாளம் டிஜிட்டல் முறையில் நேரடியாக அச்சிடப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார்.

தற்போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அடையாளங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை டிஜிட்டல் முறையிலேயே பதிக்கப்படுகின்றன என்றும், இருந்தபோதிலும் ஸ்டிக்கர் திட்டத்திற்கான செலவில் மாற்றம் ஏற்படவில்லை என்பதும் குழுக் கலந்துரையாடலில் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

Source: https://samugammedia.com/safety-sticker-scheme-for-alcohol-bottles-no-reduction-in-cost-even-in-digital-mode-1782626305

NO COMMENTS

Exit mobile version