மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு பாலங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் போது இலுப்பைக்கடவை பகுதியைத் தாண்டியுள்ள முதல் பாலம் மற்றும் சிப்பியாறு அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள பாலம் ஆகிய இரண்டிலுமே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விரிசல்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதாகவும், மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் பாலங்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார்–யாழ்ப்பாணம் பிரதான வீதி நாளாந்தம் பொதுமக்கள் மட்டுமன்றி நோயாளர் காவு வண்டிகள் உள்ளிட்ட அத்தியாவசிய போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், “பாலம் முழுமையாக சேதமடைந்த பின்னரே வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கவனம் திரும்புமா?” என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த மழைக்காலத்தில் விடத்தல்தீவு அருகே அமைந்துள்ள மின்னி எறிஞ்சான் பாலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நிலையை நினைவுகூரும் மக்கள், அதுபோன்றதொரு நிலை மீண்டும் ஏற்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பிரதான வீதியின் இருபுறங்களிலும் படர்ந்துள்ள மரங்கள் மற்றும் செடிகளை அகற்றி, வாகன ஓட்டிகளின் பார்வைத்திறனை மேம்படுத்துவதுடன் பயணப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
