Home இலங்கை மலையக கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 20ஆவது ஆண்டு விழா!

மலையக கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 20ஆவது ஆண்டு விழா!

0
image

2026 ஜூன் 14 அன்று கொழும்பில் நடைபெற்ற மலையக கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (UEDS) 20ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா கலந்து கொண்டார். 

இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர், தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர்  பிரதீப் சுந்தரலிங்கம் மற்றும் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ரெய் காலி பால்தசார் ஆகியோரும் பங்கேற்றனர்.

UEDS அமைப்பின் இருபது ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டிய உயர்ஸ்தானிகர், கல்வி முன்னேற்றத்திற்கும் இந்திய வம்சாவளித் தமிழர் (IOT) சமூகத்தின் அதிகாரமளிப்பிற்கும் இச்சங்கம் ஆற்றிய முக்கிய பங்களிப்பை பாராட்டினார். இந்திய வம்சாவளித் தமிழர் சமூகமானது இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பகிரப்பட்ட வரலாற்று மற்றும் நாகரிகத் தொடர்புகளில் தனித்துவமான இடத்தை வகிப்பதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான உயிர்ப்புமிக்க பாலமாக தொடர்ந்து திகழ்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளடக்கிய அபிவிருத்திக்கான முக்கிய இயக்கியாக கல்வியை இந்தியா கருதுவதை மீண்டும் உறுதிப்படுத்திய உயர்ஸ்தானிகர், சிலோன் தோட்டத் தொழிலாளர் கல்வி அறக்கட்டளை (CEWET) கல்வி உதவித்தொகைத் திட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட மேம்பாடுகளை எடுத்துரைத்தார். அதன் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 350 இலிருந்து 700 ஆக இரட்டிப்பாக்கப்பட்டதுடன், உதவித்தொகைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய கலாசார உறவுகள் பேரவை (ICCR) வழங்கும் கல்வி உதவித்தொகைகள், இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (ITEC) பயிற்சி திட்டங்கள் மற்றும் பிற திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் ஆயிரக்கணக்கான இலங்கை மாணவர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் ரூபாய் 75 கோடி மதிப்புடைய இந்திய வம்சாவளித் தமிழர் நலத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களையும் உயர்ஸ்தானிகர் எடுத்துக்காட்டினார். அவற்றில் பாடசாலை உட்கட்டமைப்பு மேம்படுத்தல் மற்றும் 2,000-க்கும் மேற்பட்ட தோட்டப் பாடசாலை ஆசிரியர்களுக்கு STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பயிற்சி வழங்குதல் உள்ளிட்டவை அடங்கும். மேலும், இந்திய வம்சாவளித் தமிழர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதையும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைப் புலம்பெயர் சமூகத்தின் ஐந்தாம் மற்றும் ஆறாம் தலைமுறையினருக்கும் இந்திய வெளிநாட்டு குடியுரிமை (OCI) அட்டை பெறும் தகுதி விரிவுபடுத்தப்பட்டதையும், அதற்கான நடைமுறை விதிமுறைகளில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் இலங்கையுடனான அபிவிருத்தி கூட்டாண்மை மக்கள் மையப்படுத்தப்பட்டதாகவே தொடர்கின்றது என்பதை வலியுறுத்திய உயர்ஸ்தானிகர், இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் கல்வி மற்றும் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், இந்திய வம்சாவளித் தமிழர் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்காக சிறப்பான பங்களிப்பு செய்த UEDS அமைப்பின் சாதனையாளர்களுக்கு விருதுகளையும் உயர்ஸ்தானிகர் வழங்கினார்.

Source: https://samugammedia.com/20th-anniversary-of-the-hill-country-education-development-association-1781523282

NO COMMENTS

Exit mobile version