Home இலங்கை மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு – ஜனாதிபதி அநுர

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு – ஜனாதிபதி அநுர

0
image

நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரஜரட்ட பாரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் எதிர்காலப் பணிகளுக்கு தடையாக உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்காக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கீழ் மல்வத்து ஓயா பகுதியில் நிலவும் நீர்ப்பற்றாக்குறையைத் தீர்த்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது இத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.

மேலும், தந்திரிமலைப் பிரதேசத்தில் புதிய அபிவிருத்திப் பகுதியொன்றை உருவாக்குதல், மன்னார் மாவட்டத்திலுள்ள யோதவாவி மற்றும் அகிதமுருப்பு வாவி ஆகியவற்றுக்குட்பட்ட சுமார் 40,000 ஏக்கர் வயல் நிலங்களில் சிறுபோக மற்றும் பெரும்போக பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துதல், குடிநீர் வழங்குதல், நீர்மின் உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, சுற்றுலா வலயத்தை உருவாக்குதல், மீன்பிடித் தொழிலை மேம்படுத்துதல் மற்றும் மனித – யானை மோதலை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை 2029-2030ஆம் ஆண்டளவில் முழுமையாக நிறைவு செய்து மக்களிடம் கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இது வடமத்திய மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக காணிகளைக் கையகப்படுத்துதல் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இடம்பெயரும் மக்களுக்கு முன்னைய வாழ்க்கைத் தரத்தை விட சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், மீள்குடியேற்றப்படும் மக்களுக்காக நவீன விவசாயத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல், தனியார் துறை விற்பனை நிலைய வலையமைப்புகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுடன் கொள்வனவு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி விவசாய உற்பத்திகளுக்கு நிலையான சந்தை வாய்ப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.

மனித – யானை மோதலைக் குறைக்கும் வகையில் வனஜீவராசிகள் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து யானை வேலிகளை அமைத்து பராமரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதற்கு மேலதிகமாக, நீண்டகால உயிரியல் தீர்வாக பனை வேலி போன்ற இயற்கை வேலிகளை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.

அதேவேளை, கடந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ‘குடா விலச்சி வாவித் திட்டத்தை’ மீள ஆரம்பிப்பது உள்ளிட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களை புனரமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டம் ரஜரட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும் என தெரிவித்த தந்திரிமலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி, வடகிழக்கு மாகாணங்களின் உப பிரதான சங்கநாயக்க வண. தந்திரிமலை சந்தரதன தேரர், திட்டத்தை முன்னெடுப்பதில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

மேலும், திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் நம்பிக்கையளிக்கும் வகையில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/government-aims-to-complete-the-malvathu-oya-irrigation-project—president-anura-1788604975

NO COMMENTS

Exit mobile version