மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், நேற்றைய(12) தினம் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதற்கு அவசியமான வசதிகள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை மற்றும் முக்கிய தேவைகள் தொடர்பில் வைத்தியசாலையின் முன்னாள் மாவட்ட வைத்திய அதிகாரி (D.M.O) வைத்தியர் A.R.A. ரிஷான் அவர்களுடன் விரிவாக கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.
வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு 27 ஊழியர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது 14 ஊழியர்கள் மாத்திரமே கடமையில் உள்ளனர்.
இதனால் 13 ஊழியர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றது. நோயாளர்களுக்கு தடையின்றி மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இந்த ஊழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், நான்கு மாடிகளைக் கொண்ட மஸ்கெலியா வைத்தியசாலையில் உள்ள இரண்டு மின்தூக்கிகளும் கடந்த ஒன்றரை வருடங்களாக இயங்காத நிலையில் இருப்பதும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனால் நோயாளர்களை மாடிகளுக்கு இடையில் மாற்றும்போது பெரும் சிரமங்கள் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்த மின் அழுத்தம் இதற்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சார இணைப்பை சீரமைத்து மின்தூக்கிகளை விரைவில் இயங்கச் செய்வதற்கான நடைமுறைத் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மேலும், 70,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை வழங்கும் A தர வைத்தியசாலையாக இருந்தும், முறையான வைத்திய ஆய்வுக்கூட வசதி இல்லாதிருப்பது பாரிய குறைபாடாக சுட்டிக்காட்டப்பட்டது.
இரத்த மாதிரிகள் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக மாதிரிகளை டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி, முடிவுகளைப் பெற வேண்டிய நிலை காணப்படுவதால் நோயாளர்களுக்கு ஏற்படும் காலதாமதத்தை கருத்திற்கொண்டு, மஸ்கெலியா வைத்தியசாலையிலேயே தேவையான ஆய்வுக்கூட வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனுடன், வைத்தியசாலையில் காணப்படும் நோயாளர் காவுவண்டி அடிக்கடி பழுதடைவதால், அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை ஏனைய வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, நோயாளர் காவுவண்டியை முறையான நிலையில் பராமரிப்பதுடன், அவசர தேவைகளுக்கான மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
வைத்தியசாலையில் கண்டறியப்பட்ட மேற்கண்ட குறைபாடுகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளருக்கு உடனடியாக தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தியுள்ள ஜீவன் தொண்டமான், பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக மாவட்ட செயலாளரை இன்று(13) நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலைக்கென்று கர்ப்பிணி தாய்மார்களின் குழந்தை பரிசோதனை செய்யும் ஸ்கேன் இயந்திரம் தேவைப்பாடு தொடர்பாக கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் பேசியதற்காக வைத்திய அதிகாரிகளினால் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மஸ்கெலியா மற்றும் அதனைச் சூழவுள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தரமானதும் தடையற்றதுமான சுகாதார சேவையை உறுதி செய்வது அவசியம் எனத் தெரிவித்த ஜீவன் தொண்டமான், மக்களின் அடிப்படைத் தேவைகளை நேரில் சென்று கண்டறிந்து, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி, நடைமுறை ரீதியான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தார்.
மக்களின் சுகாதார உரிமையை உறுதி செய்வதற்காக தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
