Home இலங்கை மாணவர்களுக்கான பாடநூல்களை எடைக்கு விற்ற லொறி சாரதி – கொள்வனவு செய்தவரும் கைது

மாணவர்களுக்கான பாடநூல்களை எடைக்கு விற்ற லொறி சாரதி – கொள்வனவு செய்தவரும் கைது

0
image

கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலங்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அவற்றை பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு எடைக்கு விற்பனை செய்து 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக அச்சிடப்பட்ட 19,892 பாடநூல்களை கொண்டு செல்வதற்கான ஒப்பந்தம் பியகம பகுதியிலுள்ள நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது. இதன்படி, கடந்த மே மாதம் குறித்த நிறுவனத்துக்குச் சொந்தமான லொறியின் சாரதி பாடநூல் தொகுதியை பொறுப்பேற்றுள்ளார்.

எனினும், பாடநூல்கள் உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரியவந்ததையடுத்து, கல்வி வெளியீட்டுத் திணைக்கள அதிகாரி ஒருவர் அண்மையில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், லொறியின் சாரதியைக் கைது செய்ததுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பாடநூல்கள் பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு எடைக்கு விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதற்கமைய, பாடநூல்களை கொள்வனவு செய்த நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த பழைய காகிதக் கடைக்காரர் பாடநூல்களை பேலியகொட பகுதியில் உள்ள பழைய பத்திரிகைகள் மற்றும் காகிதங்களை அரைக்கும் நிறுவனமொன்றிற்கு விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பல சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Source: https://samugammedia.com/truck-driver-who-sold-textbooks-meant-for-students-by-weight–both-the-buyer-and-the-seller-arrested-1786770012

NO COMMENTS

Exit mobile version