Home இலங்கை மாவிலாற்றின் நீர்மட்டம் வீழ்ச்சி: 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிப்பு

மாவிலாற்றின் நீர்மட்டம் வீழ்ச்சி: 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிப்பு

0
image

திருகோணமலை மாவட்டம் சேருநுவர மாவிலாற்றின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், அப்பகுதியில் உள்ள சுமார் 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, தங்களது பயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் விவசாயிகள் கந்தக்காடு பகுதியில் இருந்து பாயும் மகாவலி ஆற்றின் நீரைத் தடுத்து, தற்காலிக மணல் மூட்டை அணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாவலி ஆற்றின் மேல்நிலைப் பகுதிகளில் போதிய மழைவீழ்ச்சி இல்லாததன் காரணமாக, மாவிலாற்றிற்கு வரும் நீரின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், இதுவே தற்போதைய நீர்மட்ட வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தின் உப்பாறு, கங்கை மற்றும் ரால்குளி முகத்துவாரங்கள் ஊடாக மகாவலி ஆற்றின் நீர் கடலில் கலப்பதைத் தடுத்து, கந்தக்காடு பகுதியில் இருந்து உப்பாறு நோக்கிப் பாயும் நீரை மாவிலாற்றிற்கு திருப்புவதே இந்த தற்காலிக மணல் மூட்டை அணை அமைக்கும் நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

இவ்வாறான பாரிய மணல் மூட்டை அணை அமைக்கும் நடவடிக்கை இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் முன்னெடுக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டு மே மாதத்திலும் இதேபோன்ற அணை அமைத்து நீர் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய கடுமையான நீர் பற்றாக்குறையால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, அரச அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, போதுமான நீர்ப்பாசன வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/mavilaar-river-water-levels-drop-25000-acres-of-farmland-affected-by-drought-1783594072

NO COMMENTS

Exit mobile version