Home இலங்கை மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே இனி அஸ்வெசும! வெளியான அறிவிப்பு

மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே இனி அஸ்வெசும! வெளியான அறிவிப்பு

0
image

இனிவரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை, ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான பயனாளிகளின் தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் நான்கு பிரிவுகளின் அடிப்படையில் சுமார் 16 இலட்சம் மக்கள் உதவித்தொகை பெற்றிருந்தனர். எனினும், கடந்த ஏப்ரல் மாதம் இடைக்காலப் பிரிவில் இடம்பெற்றிருந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன.

அதேவேளை, இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நலிவடைந்த மக்களுக்கான மூன்றாவது பிரிவில் இடம்பெற்றிருந்த 4 இலட்சத்து 25 ஆயிரம் பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகையும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த இரு பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ள ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் மீண்டும் மதிப்பீட்டின் அடிப்படையில் அஸ்வெசும உதவித்தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக தெரிவித்துள்ளார்.

புதிய தரவு சரிபார்ப்பு மற்றும் தகுதி மதிப்பீட்டின் மூலம் உண்மையில் உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு நலத்திட்ட நிதி சென்றடைவதை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/now-aaswesum-is-only-for-families-living-under-extreme-poverty-official-announcement-released-1782361723

NO COMMENTS

Exit mobile version