Home இலங்கை எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் குடியிருப்பு சுவர் – அச்சத்தில் தோட்ட மக்கள்

எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் குடியிருப்பு சுவர் – அச்சத்தில் தோட்ட மக்கள்

0
image

கண்டி – தெல்தெனிய, ரங்கல கோணவல தோட்டப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் லயன் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு வசிக்கும் மக்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த தோட்டத்தின் லயன் குடியிருப்பு ஒன்றின் அருகிலுள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில், வீடொன்றின் சமையலறை பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ச்சியான மழையினால் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, மற்றுமொரு லயன் குடியிருப்பின் சுவர் வளைந்து காணப்படுவதுடன், எந்நேரத்திலும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  குறித்த குடியிருப்புகளின் பல வீட்டு சுவர்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த லயன் குடியிருப்புகளில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களாக வீசிய பலத்த காற்றினால் சில வீடுகளின் கூரைத் தகரங்கள் காற்றில் பறந்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தங்களது உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை  நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், வட்டவளை நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள மௌஞ்ஜீன் தோட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜனவசம பெருந்தோட்ட சபைக்கு சொந்தமான இந்தத் தோட்டத்தில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மௌஞ்ஜீன் புகையிரத நிலைய அலுவலகம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தோட்டத்திற்குச் செல்லும் பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது. இதனையடுத்து, தோட்ட நிர்வாகத்தினால் சரிந்து விழுந்த மண் திட்டுக்களை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதனால் மூன்று குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, தற்காலிகமாக தோட்ட ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

எனினும், தொடர்ந்தும் மழை பெய்யும் பட்சத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு, பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களும் ஆலயத்தில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்படலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Source: https://samugammedia.com/a-residential-wall-thats-always-at-risk-of-collapsing—garden-residents-are-worried-1786437865

NO COMMENTS

Exit mobile version