Home இலங்கை மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் பலி! உறவினர் திருமணத்துக்காக குவைத்தில் இருந்து வந்தபோது துயரம்

மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் பலி! உறவினர் திருமணத்துக்காக குவைத்தில் இருந்து வந்தபோது துயரம்

0
image

மாத்தறை  – வெலிகம பிரதேசத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குவைத் நாட்டில் வசித்து வந்த அம்மார் எனப்படும் நான்கு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவன் தனது தாய், தந்தை மற்றும் சகோதரர்களுடன் குவைத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வெலிகமவில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இலங்கை வந்துள்ளார்.

திருமண நிகழ்வுகள் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் மீண்டும் குவைத் செல்ல குடும்பத்தினர் தயாராகி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, நேற்றைய தினம் பிற்பகல் சுமார் 2 மணியளவில் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் சிறுவன் வெளியே சென்றுள்ளார். வீட்டுக்கு அருகிலுள்ள ஆற்றுக்குச் சென்ற அவர், பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் சிறிய வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க முயன்றுள்ளார்.

இதன்போது எதிர்பாராத விதமாக சிறுவன் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் வீட்டில் காணப்படாததால் உறவினர்களும் அயலவர்களும் அவரைத் தேடியுள்ளனர். இதன்போது, சிறுவனின் சடலம் ஆற்றில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக சிறுவனை வெலிகம மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/a-boy-who-went-fishing-passed-away-sadness-when-relatives-returned-from-kuwait-for-a-wedding-1788758340

NO COMMENTS

Exit mobile version