வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (16.06.2026) முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள வளக்குறைபாடுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டார்.
மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் முன்னதாக மேற்கொள்ளப்பட்ட தரவு சேகரிப்புகளின் தொடர்ச்சியாக மேற்கொண்ட இந்த விஜயத்தின் போது, மருத்துவமனையின் அமைவிடம், கட்டிட வசதிகள், ஆளணிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைகள் நேரடியாக பார்வையிடப்பட்டதுடன் மருத்துவப் பொறுப்பதிகாரியுடன் விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதேச மருத்துவமனைகளின் குறைபாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நோக்கில், 17.09.2025 அன்று வள மேம்பாட்டு தரவு கோரல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு 02.04.2026 அன்று கிடைத்த பதிலில், முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனையின் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாகவே இன்றைய நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது குறித்த மருத்துவமனை தற்காலிக கட்டடத்தில் இயங்கிவருவதுடன், நோயாளர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், வெளிநோயாளர் பிரிவு, உள்நோயாளர் பிரிவு, பஞ்சகர்மா சிகிச்சை பிரிவு மற்றும் மூலிகைத் தோட்டம் போன்ற அத்தியாவசிய வசதிகளுக்கான தேவை இருந்தபோதிலும் இடவசதி பற்றாக்குறை காரணமாக வினைத்திறனான சேவையளிப்பில் சவால்கள் நிலவுவதாக மருத்துவப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் 7,575 வெளிநோயாளர்களும் 751 தொடர் சிகிச்சை (Clinic) நோயாளர்களும் சிகிச்சை பெற்றுள்ளனர். மாத சராசரியாக 700 நோயாளர்கள் வருகை தந்துள்ளனர். 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 3708 நோயாளர்கள் சிகிச்சை பெற்றுள்ளதுடன், இம்மாதம் 15ஆம் திகதி வரை 445 பேர் வருகை தந்துள்ளனர்.
மேலும், விடுதி வசதிகளுடன் இயங்க வேண்டிய இம்மருத்துவமனை தற்போது வெளிநோயாளர் சேவையுடன் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இயங்குவதால், நீண்டகால சிகிச்சை, தங்கியிருந்து சிகிச்சை பெறுதல் மற்றும் நோயாளர் கண்காணிப்பு போன்ற தேவைகளில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஆளணிப் பற்றாக்குறை தொடர்பில், அனுமதிக்கப்பட்ட 13 பணியிடங்களில் தற்போது மருத்துவப் பொறுப்பதிகாரி ஒருவரும் இரு பணியாளர்களுமாக (Labourer) மொத்தம் 03 பேர் மட்டுமே பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பதிலீடு இன்றி விடுவிக்கப்பட்ட சுதேச மருத்துவர்களுக்கான பணிவெற்றிடங்கள் மிகவிரைவில் நிரப்பப்படும் என சுதேச மருத்துவத்துறை ஆணையாளர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோர் கடந்த 2026.06.03 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளதாக ரவிகரன் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும், முள்ளியவளை கிராமிய சித்த மருத்துவமனைக்கு நிரந்தர இடவசதி ஏற்படுத்தும் நோக்கில் மாற்றுக் காணி ஒதுக்கீடு தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடுவதாகவும் மருத்துவமனையின் சேவைகளை மேம்படுத்த தேவையான ஆளணி மற்றும் உட்கட்டமைப்பு வளங்களைப் பெற உரிய மட்டங்களில் கலந்துரையாடி பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
