Home இலங்கை மூதூர் பாலநகர் மைதானத்தை கழிவுக்கூளங்களால் ஆக்கிரமிக்கும் பிரதேச சபை! மக்கள் கவலை

மூதூர் பாலநகர் மைதானத்தை கழிவுக்கூளங்களால் ஆக்கிரமிக்கும் பிரதேச சபை! மக்கள் கவலை

0
image

திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேச சபைக்குட்பட்ட பாலநகர் கிராமத்தில் அமைந்துள்ள பொது மைதானம், கழிவுகளை கொட்டும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல தலைமுறைகளாக கிராம மக்களின் பொதுப் பயன்பாட்டில் இருந்து வரும் பாலநகர் மைதானம், விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வுகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். 

2007ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மைதானத்தைச் சுத்தப்படுத்தி, சீரமைத்து தொடர்ந்து பராமரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மைதானம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கழிவுகளை வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதில் காணப்படும் சிரமங்களை காரணமாகக் கொண்டு, மூதூர் பிரதேச சபையினால் மைதானத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரச் சீர்கேடும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுவதால் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், மைதானத்திற்கு முன்பாக அமைந்துள்ள பிரதான வீதியை தினமும் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதாரப் பாதிப்புகள் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல தலைமுறைகளாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் பொது மைதானத்தை கழிவுகள் கொட்டும் இடமாகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், தற்போது மைதானத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றி, அதனை முறையாகச் சுத்தப்படுத்தி, மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Source: https://samugammedia.com/muthur-palanagar-playground-is-being-taken-over-by-trash-dumps-by-the-local-council-people-are-worried-1787377605

NO COMMENTS

Exit mobile version