முகநூல் ஊடாக மூன்று நாட்களில் நண்பனானதாகக் கூறப்படும் போலி வெளிநாட்டு வைத்தியர் மற்றும் அவருடன் தொடர்புடைய இணைய மோசடி கும்பலிடம் பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததாவது, மட்டக்களப்பு பொலிஸ் பிரிவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 13ஆம் திகதி லண்டனில் வசிப்பதாகவும், டான் என்ற பெயருடைய வைத்தியர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திய நபர் முகநூல் ஊடாக நட்புக் கோரிக்கை அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து இருவரும் சமூக ஊடகத்தின் மூலம் உரையாடி வந்துள்ளனர்.
பின்னர் கடந்த 16ஆம் திகதி, கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் இயங்கும் வெளிநாட்டு பொதிகளை விநியோகிக்கும் நிறுவனம் எனத் தம்மை அறிமுகப்படுத்திய நபர்கள், லண்டனிலிருந்து டான் அனுப்பியதாகக் கூறப்படும் பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அதில் பல இலட்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பொதியை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க (Clear) முதற்கட்டமாக 87 ஆயிரம் ரூபாவை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கோரியுள்ளனர். இதனை நம்பிய பெண் கடந்த 17ஆம் திகதி 87 ஆயிரம் ரூபாவை அனுப்பியுள்ளார்.
அதன்பின்னர் மேலும் 3 இலட்சம் ரூபா தேவைப்படுவதாகக் கூறியதை அடுத்து, அந்தத் தொகையையும் அவர் செலுத்தியுள்ளார். தொடர்ந்து பொதியை விடுவிக்க மேலும் பணம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டதால், பெண்ணின் தாயார் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அதே வங்கிக் கணக்கில் வைப்பில் இட்டுள்ளார்.
இதற்குப் பிறகும் மோசடி கும்பல் மேலும் ஒரு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதுடன், இன்னும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலுத்தினால் பொதி முழுமையாக விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதனால் சந்தேகமடைந்த பெண், இனி பணம் வழங்க முடியாது என தெரிவித்ததையடுத்து, மோசடி கும்பலின் தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்துள்ளன. இதனையடுத்து தான் இணைய மோசடிக்கு இலக்கானதை உணர்ந்த அவர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக அறிமுகமாகும் தெரியாத நபர்களை நம்பி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் இருந்து பரிசுப் பொதிகள் வந்துள்ளதாகக் கூறி பணம் கோரும் மோசடி கும்பல்களிடம் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
