Home இலங்கை மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கின் பங்கை 10 சதவீதமாக உயர்த்த நிர்ணயித்துள்ளோம் – வடக்கு ஆளுநர்

மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கின் பங்கை 10 சதவீதமாக உயர்த்த நிர்ணயித்துள்ளோம் – வடக்கு ஆளுநர்

0
image

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம்.

இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பேராதரவும், விடாமுயற்சியும், புதியதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் எமக்குத் தேவை. தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமக்குக் கிடைத்துள்ள சாதகமான நிலைப்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி இந்த இலக்கை எட்டுவோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த வட மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2026 இன்று (15.08.2026) சனிக்கிழமை கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் ஆரம்பமானது. இன்று காலை நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

போரின் பின்னர் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இன்று குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளமை பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட ஆளுநர், ஒவ்வொரு ஆண்டும் தொழில் முயற்சியாளர்கள் புதிய உற்பத்திப் பொருட்களை அறிமுகப்படுத்துவதும், புதுமையாகவும் புத்தாக்கமாகவும் சிந்தித்து தமது தொழில்களை விரிவுபடுத்துவதும் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். இவ்வாறான புதிய முயற்சிகளே அவர்களை அடுத்த கட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண உற்பத்திகளுக்கு உள்நாட்டு சந்தையைத் தாண்டி ஏற்றுமதி சந்தையிலும் சிறந்த வாய்ப்புகள் காணப்படுவதாக ஆளுநர் தெரிவித்தார்.

குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் உறவுகள் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களில் ஆர்வம் கொண்டிருப்பதால், அவர்களை ஒரு முக்கிய சந்தையாகக் கொண்டு ஏற்றுமதியை விரிவுபடுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண ஏற்றுமதியாளர் சங்கம் ஊடாகவும் உற்பத்தியாளர்கள் சர்வதேச சந்தைகளை அடையக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உற்பத்தித் திறன் அதிகமாகக் காணப்படுவதுடன், இம்முறை சிறுபோகத்திலும் எதிர்பார்த்ததை விட அதிக விளைச்சல் கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இருப்பினும் இவ்வாறான உற்பத்திகளில் பெரும்பகுதி பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றப்படாமல் மூலப்பொருட்களாகவே வெளிமாவட்டங்களுக்கும் வெளிப்பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுவதாகக் கவலை வெளியிட்டார். இதனால் உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அதிகபட்ச பொருளாதாரப் பயன் கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மூலப்பொருட்களை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளாக மாற்றுவதே வடக்கு மாகாணத்தின் தொழில் வளர்ச்சியின் அடுத்த முக்கிய கட்டமாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், உற்பத்தி, பதனிடல், பொதியிடல், சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி என முழுமையான உற்பத்திச் சங்கிலியை உருவாக்குவதன் மூலம் தொழில் முயற்சியாளர்களின் வருமானத்தையும் போட்டித்திறனையும் உயர்த்த முடியும் என்றார்.

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தால் கடந்த காலங்களில் சிறிய அளவிலான பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளுக்குத் தேவையான இயந்திர உபகரணங்கள் தொழில் முயற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மிகக் குறைந்த வட்டியுடனான கடன் வசதிகளும் வழங்கப்படவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார். அரசாங்கத்தால் ஏற்படுத்தப்படும் இவ்வாறான வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தமது தொழில் முயற்சிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துமாறு அவர் தொழில் முயற்சியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணத்தில் தொழில் முயற்சிகள் விரிவடைவது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்ளூர் மூலப்பொருட்களுக்கு பெறுமதி சேர்த்து அவற்றை உயர்ந்த பெறுமதியுடைய பொருட்களாக மாற்றுவதற்கும், மாகாணத்தின் பொருளாதாரப் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இவ்வர்த்தகச் சந்தையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உற்பத்திகள், பொதியிடப்பட்ட உணவுப் பொருட்கள், ஆடை மற்றும் துணி உற்பத்திகள், மரவேலைப் பொருட்கள், மட்பாண்டப் பொருட்கள், பனை மற்றும் தென்னை சார்ந்த உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கும் சந்தைப்படுத்தலுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதுடன், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர் தவிர்க்க முடியாத காரணங்களால் கலந்துகொள்ளாத நிலையில், தூய்மை இலங்கை செயலணியின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ம.மோகன் கலந்துகொண்டார்.

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன் தலைமையில் நடைபெற்ற இநத நிகழ்வில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், கிளிநொச்சி மாவட்ட செயலர் சு.முரளிதரன், கரைச்சி பிரதேசசபையின் கௌரவ தவிசாளர் அ.வேளமாலிகிதன், தொழில் முயற்சியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகத் துறையினர் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

வடக்கு மாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2026 இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் நடைபெறவுள்ளதுடன், பொதுமக்கள் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வர்த்தகச் சந்தையைப் பார்வையிட முடியும்.

Source: https://samugammedia.com/we-have-set-a-target-to-raise-the-norths-share-of-the-gross-national-product-to-10-percent–northern-governor-1786785566

NO COMMENTS

Exit mobile version