Home இலங்கை மொரகஹகந்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கு நாட்டப்பட்ட அடிக்கல்

மொரகஹகந்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கு நாட்டப்பட்ட அடிக்கல்

0
image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க ஆகியோர் இணைந்து, மாத்தளை மொரகஹகந்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல்லை இன்று நாட்டினர்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் இந்திய அரசாங்கத்தின் மானிய உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள 13 நிரந்தரப் பாலங்களில் முதலாவது பாலமாக மொரகஹகந்த பாலம் அமைகிறது.

‘டிட்வா’ புயலைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கிய உட்கட்டமைப்புகளை மீளமைத்து புனரமைப்பதற்காக இந்தியா அறிவித்த 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான விரிவான மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

பிராந்தியத்தின் போக்குவரத்து தொடர்பை மீள ஏற்படுத்துவதில் இந்தப் பாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இலங்கை அரசாங்கத்தின் விசேட கோரிக்கையின் அடிப்படையில் மொரகஹகந்த பால நிர்மாணத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. 

175 மீற்றருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட இந்தப் புதிய பாலம், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களுக்கு இடையிலான முக்கிய இணைப்பை ஏற்படுத்துவதுடன், அப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கும் உதவியாக அமையும்.

இந்தப் பாலம் இலங்கையில் நீண்டகாலமாக செயற்பட்டு வரும் இந்திய அரச துறை நிறுவனமான IRCON International Limited நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மொரகஹகந்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏனைய 12 நிரந்தரப் பாலங்களின் நிர்மாணப் பணிகளும் எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘டிட்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து இணைப்புகளை உடனடியாக மீள ஏற்படுத்துவதற்காக, இந்தியா ஏற்கனவே இலங்கையின் 10 இடங்களில் 11 பெய்லி பாலங்களை நிர்மாணித்துள்ளது. 

நிரந்தரப் பாலத் திட்டத்தின் ஆரம்பம், அவசரகால போக்குவரத்து மீளமைப்பிலிருந்து நீடித்த மற்றும் பேரிடர்களைத் தாங்கக்கூடிய நிரந்தர உட்கட்டமைப்புகளை உருவாக்கும் கட்டத்திற்கான மாற்றத்தை குறிக்கிறது.

பாலத் திட்டங்களுக்கு மேலதிகமாக, இந்திய ரூபாய் அடிப்படையிலான 250 மில்லியன் அமெரிக்க டொலர் நீண்டகால கடன் திட்டத்தின் கீழ் பல்வேறு ரயில்வே தொடர்பு மேம்பாட்டுத் திட்டங்களும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

இதில் பேராதனை பகுதியில் புதிய ரயில்வே பாலம் அமைத்தல், ரயில் பாதைகளை புனரமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமிக்ஞை (Signalling) அமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் அடங்குகின்றன.

மொரகஹகந்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவது, இலங்கையில் தாங்குதிறன் மிக்க உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியா தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவை வெளிப்படுத்துகிறது. 

தீவு முழுவதும் உள்ள மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிகள், இலங்கையுடனான இந்தியாவின் நீண்டகால மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்திப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாகும்.

Source: https://samugammedia.com/foundation-stone-laid-for-construction-of-moragahakanda-bridge-1790004817

NO COMMENTS

Exit mobile version