Home இலங்கை யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர் விற்பனை; உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் அபராதம்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர் விற்பனை; உணவகத்திற்கு ரூ.9.5 இலட்சம் அபராதம்

0
image

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றிற்கு 950,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் யாழ்ப்பாண மாவட்ட விசாரணை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 1 லீற்றர் குடிநீர் போத்தலொன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 120 ரூபாய் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக 200 ரூபாவிற்கு நுகர்வோர் ஒருவருக்கு குறித்த உணவகத்தால் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக, குறித்த நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஒரு பொருளைக் கொள்வனவு செய்யும் போது அதிலுள்ள அச்சிடப்பட்ட விலை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைச் சரிபார்க்குமாறும், செலுத்தும் பணத்திற்கான சரியான பற்றுச்சீட்டைப் பெற்று அதைப் பாதுகாப்பாக வைத்திருக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்தல் அல்லது வேறு ஏதேனும் நுகர்வோர் சட்டங்களை மீறும் செயற்பாடுகள் குறித்த தகவல்கள் தெரிந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் அவசர தொலைபேசி இலக்கத்தினூடாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு அந்த அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Source: https://samugammedia.com/drinking-water-sold-at-high-prices-in-jaffna-restaurant-fined-rs-95-lakhs-1787817454

NO COMMENTS

Exit mobile version