தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பொலிஸார் தலையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (25) காலை இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு திடீரென சென்ற பொலிஸார், போராட்டத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஒலிபெருக்கிகளை உடனடியாக அகற்றுமாறும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் தெரிவித்ததாக போராட்ட ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
இதன்போது, தாம் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதாகவும், அதற்கான அனுமதி அவசியமெனில் உடனடியாக அனுமதி வழங்கப்படுமா எனவும் போராட்டக்காரர்கள் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும், பொலிஸ் நிலையத்திற்கு வந்து பொறுப்பு அதிகாரியுடன் கலந்துரையாடுமாறு பொலிஸார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், சில தினங்களுக்கு முன்னர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகளை பொலிஸார் அகற்றிச் சென்றதாகவும், பல தடவைகள் கோரிக்கை விடுத்த போதிலும் அவை இதுவரை மீள வழங்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஒலிபெருக்கிகளை மீண்டும் பயன்படுத்துவதற்கான அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களையும் பொலிஸார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஒலிபெருக்கிகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் வலியுறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதுடன், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
