2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (25) கிளிநொச்சியில் நடைபெற்றது.
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில், 2009 ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற நீதி அமைச்சர் மற்றும் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார, குடும்பத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன், உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கி வைத்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் கிளிநொச்சி அபிவிருத்திக் குழு இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
