நுவரெலியா – லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் – ரட்னகிரி தோட்டப் பகுதியில் இன்று (31) காலை இடம்பெற்ற குளவி தாக்குதலில் 70 வயதுடைய தோட்டத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தோட்டப் பணியில் ஈடுபட்டிருந்தபோது காலை 10 மணியளவில் குளவிகள் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குளவிக் கொட்டுக்கு இலக்கான 12 தோட்டத் தொழிலாளர்கள் சிகிச்சைக்காக லிந்துலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் லிந்துலை ரட்னகிரி தோட்டத்தைச் சேர்ந்த முத்து நாராயணசாமி (70) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணியின்போது எதிர்கொள்ளும் இவ்வாறான விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என தொழிலாளர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/garden-worker-dies-in-lindula—12-people-hospitalized-1785489957
