Home இலங்கை வங்காள விரிகுடாவில் வலுவடையும் தாழமுக்கம்; ஆறுகள் அபாய மட்டத்தில்! பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய அறிகுறிகள்

வங்காள விரிகுடாவில் வலுவடையும் தாழமுக்கம்; ஆறுகள் அபாய மட்டத்தில்! பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய அறிகுறிகள்

0
image

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இத் தொகுதியினால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் ஏதும் இருக்காது என்றாலும், இத் தொகுதியை நோக்கிய காற்று வீசுகை காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. 

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இந்நிலையில்  கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான அதிக மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து, நாட்டின் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) புதிய மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், நிலைமை மோசமடையும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் மிக அதிகமாக உள்ளதால், 

காலி: நெலுவ

களுத்துறை: வலல்லாவிட்ட

கண்டி: பஸ்பாகே கோரளை

கேகாலை: மாவனெல்லை, தெரணியகலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட

நுவரெலியா: நோர்வுட், கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, கொத்மலை மேற்கு

இரத்தினபுரி: இரத்தினபுரி, ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அத்துடன்,

கொழும்பு: பாதுக்கை

காலி: நாகொட, தவலம

களுத்துறை: பாலிந்தநுவர, அகலவத்தை, புளத்சிங்ஹல, இங்கிரிய

கண்டி: கங்க இஹல கோரளை, உடபலாத

கேகாலை: வரக்காப்பொல, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, ருவன்வெல்ல

மாத்தறை: அத்துரலிய, கொடப்பொல, அக்குரஸ்ஸ, பிட்டபத்தர

நுவரெலியா: தலவாக்கலை

இரத்தினபுரி: பெல்மடுல்ல, குருவிட்ட, அயகம, நிவித்திகல, கலவானை, எலபாத ஆகிய பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை,

கொழும்பு: சீதாவக்க

காலி: நியகம, பத்தேகம

கம்பஹா: மீரிகம, அத்தனகல்ல

கண்டி: யடினுவர, பாஹததும்பர, தொலுவ, உடுனுவர

கேகாலை: ரம்புக்கனை

குருநாகல்: அலவ்வ, மாவத்தகம, பொல்கஹவெல, மல்லவப்பிட்டிய

மாத்தறை: பஸ்கொட

இரத்தினபுரி: எஹெலியகொட, கஹவத்தை, கொலோன்ன, இம்புல்பே ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையால் மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், நிலச்சரிவு, மண் வெடிப்பு, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்வது உள்ளிட்ட அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மழையுடனான காலநிலை காரணமாகப் பிரதான ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, களனி கங்கையின் க்ளென்கோர்ஸ் (Glencourse) பகுதியிலும், நில்வளா ஆற்றின் பாணடுகம பகுதியிலும் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

மேல்நில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, 

களனி கங்கையின் ஹங்வெல்ல, நோர்வுட் கெசல்கமு ஓயா மற்றும் குருகொட ஓயா 

களு கங்கையின் மகுரு கங்கை, மில்லகந்த (குடா கங்கை) மற்றும் இரத்தினபுரி 

கிங் கங்கையின் தவலம மற்றும் பத்தேகம 

மகாவலி கங்கையின் பேராதனை ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் காணப்படுகின்றது. 

எனவே, ஆற்றுப் படுகைகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கு மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/low-pressure-is-strengthening-in-the-bay-of-bengal-rivers-are-at-danger-level-signs-of-landslide-hazards-in-several-districts-1789966879

NO COMMENTS

Exit mobile version