Home இலங்கை வடக்கு உட்பட பல பகுதிகளில் இன்று கனமழை – கடற்பரப்பில் பலத்த காற்று வீசும்

வடக்கு உட்பட பல பகுதிகளில் இன்று கனமழை – கடற்பரப்பில் பலத்த காற்று வீசும்

0
image

நாட்டின் சில பகுதிகளில் இன்று (18) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

மேலும், பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

தென்மேற்குத் திசையிலிருந்து வீசும் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டிய வரையும், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

மேலும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையும், கல்பிட்டிய முதல் கொழும்பு ஊடாக காலி வரையும் உள்ள கடலோரப் பகுதிகளிலும் இதேபோன்ற பலத்த காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலும், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்பரப்புகள் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படக்கூடும்.

எனவே, கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயணிகள் வானிலை முன்னறிவிப்புகளை கவனத்தில் கொண்டு அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Source: https://samugammedia.com/heavy-rain-in-many-areas-including-the-north-today—strong-winds-blowing-over-the-sea-1781764596

NO COMMENTS

Exit mobile version