மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட முறுகல் நிலை காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் காத்தான்குடி நகரசபையின் எல்லைப் பகுதியாக காணப்படும் மஞ்சந்தொடுவாய் 16ஆம் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாயல் ஒன்றில், மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் வருமான வரி அறவிடுவதற்கான நடமாடும் சேவையை முன்னெடுக்கச் சென்றுள்ளனர்.
எனினும், குறித்த பள்ளிவாயலில் காத்தான்குடி நகரசபை ஊழியர்களினால் ஏற்கனவே வருமான வரி அறவிடும் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மட்டக்களப்பு மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினர் வருமான வரி அறவிடுவதற்கு மாநகரசபை ஊழியர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன்போது குறித்த வட்டாரத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களும் அங்கு வருகைதந்து தமது எதிர்ப்பை தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது.
குறித்த பகுதியில் கடந்த நான்கு வருடங்களாக காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் உரிய எதிர்ப்புகள் தெரிவிக்கப்படாததன் காரணமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, தமது நகரசபை தவிசாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைவாகவே வருமான வரி அறவிடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமை பதற்றமடைந்ததைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையினால் காத்தான்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இரு தரப்பினரிடமும் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பிரச்சினைக்கு நிர்வாக ரீதியாக தீர்வு காணப்படும் வரை வருமான வரி அறவிடும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.
மேலும், இரு தரப்பினரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்து இது தொடர்பில் கலந்துரையாடுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் தமது நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபையினால் முறையான வரி அறவீடுகள் முன்னெடுக்கப்படாத சந்தர்ப்பங்களில், காத்தான்குடி நகரசபையினர் வருமான வரி அறவிடும்போது பொதுமக்கள் அதனை செலுத்தும் நிலை ஏற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருவதால், இரு தரப்பினரும் இணைந்து நிரந்தர தீர்வொன்றை எடுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற முறுகல் நிலைகள் ஏற்படாத வகையில் தெளிவான நிர்வாகத் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
