Home இலங்கை வறட்சியால் மட்டக்களப்பில் நாளாந்தம் நான்கு மணி நேர நீர் வெட்டு!

வறட்சியால் மட்டக்களப்பில் நாளாந்தம் நான்கு மணி நேர நீர் வெட்டு!

0
image

வறட்சியான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதால், அப்பகுதியில் நீர் விநியோகத்தை தினமும் 4 மணித்தியாலங்களுக்கு கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், தினசரி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு முழுவதும் சபைக்குச் சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமைபோன்று இயங்கி வருவதாகவும், அவற்றில் அதிகபட்ச கொள்ளளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் கன மீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 23 முதல் 24 சதவீதமான நீர் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 65 சதவீதமான நீர் ஆறுகள் மற்றும் ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களிலிருந்து பெறப்படுவதாகவும், அதில் சுமார் 6 இலட்சம் கன மீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பெறப்படும் நீரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையிலிருந்தே பெறப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிலவும் வறட்சியான வானிலையால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கே ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம பகுதிகளில் நீர் ஆதாரங்களில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதிகளிலும் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/due-to-drought-water-is-cut-off-for-four-hours-daily-in-batticaloa-1788174816

NO COMMENTS

Exit mobile version