வளி மாசடைவின் தாக்கங்களால் இலங்கையில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான, உலகளாவிய ரீதியில் வளி மாசடைவால் ஆண்டுதோறும் 7 முதல் 8 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக குறிப்பிட்டார்.
உலகளவில் வளி மாசடைவு தொடர்ந்து அதிகரித்து வருவதுடன், அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
காற்றில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக அமைவதாகவும், வளி மாசடைவால் பல்வேறு சுவாச நோய்கள் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக ஆஸ்துமா, மூச்சுத்திணறல், நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மட்டுமன்றி, மாரடைப்பு, இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக வைத்தியர் சாந்தனி விதான தெரிவித்தார்.
வெளிப்புற வளி மாசடைவை விட வீட்டுக்குள்ளான வளி மாசடைவு ஐந்து மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் எனவும், குறிப்பாக விறகு அடுப்புகள் மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளில் இருந்து வெளியேறும் புகை உடல்நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
விறகு எரியும் போது வெளியேறும் தீங்கு விளைவிக்கும் புகை வெளியேற முடியாமல் வீட்டுக்குள் தேங்குவதால், குறிப்பாக பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்னர் பெரும்பாலும் புகைப்பிடிக்கும் ஆண்களிடையே காணப்பட்ட நுரையீரல் புற்றுநோய், தற்போது பெண்களிடையேயும் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய அவர், மூடிய இடங்களில் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்தி சமைப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
