வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், 47 வயதுடைய தந்தைக்கு வவுனியா மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இந்த வழக்கில் இன்று (16) தீர்ப்பளித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மொத்தமாக 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தையை பொலிஸார் கைது செய்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
வழக்கு விசாரணைகளின் போது, எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து, இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்கவும்,
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ ஆஜராகினார்.
தீர்ப்பளிக்கும் போது கருத்து தெரிவித்த நீதிபதி, பாதுகாக்க வேண்டிய இயற்கை பாதுகாவலரான தந்தையே இவ்வாறான கடுமையான குற்றத்தை புரிந்துள்ளதால், எந்தவித கருணையும் காட்டாமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
Source: https://samugammedia.com/shocking-verdict-in-vavuniya-father-sentenced-to-1784212792
