வவுனியா மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டடத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (04.09.2026) வெள்ளிக்கிழமை மாலை வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி மற்றும் பொதுமக்கள் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் மாவட்டச் செயலரின் வரவேற்புரையைத் தொடர்ந்து தலைமை உரையாற்றிய பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்டத்துக்கு பல்வேறு நிதி மூலங்களிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், ஒரு ரூபா கூட மீளச் செல்லாத வகையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக, வவுனியாக் குளத்தில் இடம்பெற்ற முறையற்ற ஆக்கிரமிப்புகள் தொடர்பாக நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆரம்பப் புலனாய்வு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் விசாரணைகள் இரண்டு மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்படும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, ஓமந்தைப் பிரதேசத்தில் அடிக்கடி இடம்பெறும் வீதி விபத்துகளை கருத்திற்கொண்டு, ஓமந்தை மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி வழங்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
வனவளத் திணைக்களத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை நிலைமையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், எதிர்வரும் காலப்பகுதியில் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகத்தைத் தடையின்றி உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தின் பொதுப் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளித்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், உயிர்கொல்லி போதைப்பொருட்களைக் கைப்பற்றுதல் உள்ளிட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்தும் தகவல்களை முன்வைத்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள், தொடர் நடவடிக்கைகள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது, வவுனியா மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டடத்தை அமைப்பது தொடர்பான கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஆளுநர் தனது சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், ம. ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன், து. ரவிகரன், ப. சத்தியலிங்கம் ஆகியோருடன் மேயர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
