Home இலங்கை வாரிசு அரசியல் இனி எடுபடாது; பழிவாங்கல் அல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம்!” – மஹிந்தவுக்கு...

வாரிசு அரசியல் இனி எடுபடாது; பழிவாங்கல் அல்ல, சட்டத்தின் முன் அனைவரும் சமம்!” – மஹிந்தவுக்கு பிமல், ஹந்துன்நெத்தி அதிரடிப் பதிலடி

0
image

இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த குடும்ப மற்றும் வாரிசு அரசியலை நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், ஊழல்வாதிகளின் எந்தவொரு அரசியல் மிரட்டல்களுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசு ஒருபோதும் பணியாது என்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.

மக்கள் கோரினால் நாமல் ராஜபக்ஷவைக் களமிறக்குவோம்’ என்றும், ‘எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை அமைப்போம்’ என்றும் கண்டியில் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருந்த கருத்துக்களை அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாகக் கேலி செய்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்:

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி, உயர் நீதிமன்றத்தால் ‘பொருளாதாரக் கொலையாளிகள்’ என முத்திரை குத்தப்பட்டவர்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கின்றனர். 

மீண்டும் அதே பழைய முகங்களை ஆட்சிப் பீடத்தில் அமர்த்த நாட்டு மக்கள் ஒருபோதும் ஆணை வழங்க மாட்டார்கள். 

எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கடந்த கால ஊழல்களையும், தவறுகளையும் மூடிமறைத்து சட்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இப்போது ஒன்றிணைய நாடகமாடுகின்றன. இவர்களின் போலிப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் இனிமேல் எடுபடாது” என்று சாடினார்.

தற்போதைய அரசு தங்களுக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்களைத் தீவிரப்படுத்தியுள்ளதாக 

மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் குற்றம் சாட்டியிருந்ததற்கு, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி திட்டவட்டமான மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் சட்டபூர்வமான மற்றும் சுயாதீனமான விசாரணைகளே முன்னெடுக்கப்படுகின்றன. இதில் எந்தவிதமான அரசியல் பழிவாங்கலும் இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

மக்கள் நலனுக்காகவோ அல்லது ஜனநாயகத்துக்காகவோ எதிர்க்கட்சிகள் இன்று இணைய முற்படவில்லை. மாறாக, கடந்த காலங்களில் தங்களால் செய்யப்பட்ட ஊழல்களையும், தப்பியோடியவர்களையும் சட்டத்திடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர்கள் திருட்டுத்தனமாக ஒன்றிணையப் பார்க்கிறார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணமே கடந்த கால ராஜபக்ஷக்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், ஊழல்களுமே ஆகும். அந்தப் பின்னடைவைச் சீர்செய்து, நாட்டை மீட்டெடுக்கும் கடினமான பணியையே எமது அரசு செய்து வருகின்றது” என உறுதியளித்தார்.

Source: https://samugammedia.com/dynastic-politics-will-no-longer-work-this-is-not-about-revenge-everyone-is-equal-before-the-law–pimol-to-mahinda-an-emphatic-response-from-hanthunnetti-1783389254

NO COMMENTS

Exit mobile version