Home இலங்கை வீதிகள் புனரமைக்கப்படவில்லை; குடிநீரும் இல்லை! காரைநகர் மக்கள் ஆவேசம்

வீதிகள் புனரமைக்கப்படவில்லை; குடிநீரும் இல்லை! காரைநகர் மக்கள் ஆவேசம்

0
image

யாழ்ப்பாணம் – காரைநகரில் குடிநீர் மற்றும் வீதி பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்குமாறு கோரி, ஊரி, பாலாவோடை, கல்லந்தாழ்வு, வேரப்பிட்டி, மருதபுரம், பெரயடைப்பு மற்றும் நீலங்காடு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இன்று (17) காரைநகர் பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தமது நீண்டகாலப் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் மக்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் அதிகாரிகள் பிரதேச செயலகத்திற்குள் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சிறீபவானந்தராஜா, பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில், அபிவிருத்திப் பணிகளில் தமது பகுதிகள் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினர்.

நடமாட்டம் குறைந்த காட்டு பகுதிகளில் உள்ள வீதிகள் காப்பெட் வீதிகளாகப் புனரமைக்கப்படுகின்ற நிலையில், அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதிகள் புனரமைக்கப்படாமல் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், தமது பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக இடம்பெறவில்லை எனவும், குழாய்வழி குடிநீர் திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

ஊரி பிரதான வீதியில் குடிநீர் குழாய்களைப் புதைப்பதற்கான வரைபடம் காண்பிக்கப்படுவதாகவும், ஆனால் ஊரியில் உள்ள அனைத்து கிராமங்களும் அந்த வரைபடத்தில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது கிணறுகளில் நீர் வற்றியுள்ளதால் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டனர்.

மேலும், தமது பகுதிகள் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய அவர்கள், தங்களை ஏன் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கின்றீர்கள் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதுடன், தமது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதன்போது அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் போராட்டக்காரர்களுக்கு பதிலளிக்க முற்பட்ட போதிலும், மக்கள் தொடர்ச்சியாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூன்று பேரை உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு, அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் பிரதேச செயலகத்திற்குள் சென்றனர்.

எனினும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடரும் வகையில் மக்கள் பிரதேச செயலகத்திற்கு வெளியே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Source: https://samugammedia.com/streets-havent-been-renovated-no-drinking-water-either-residents-of-karaikudi-are-furious-1789624461

NO COMMENTS

Exit mobile version