Home இலங்கை வேலணையில் மீண்டும் அதிகரிக்கும் மாட்டு திருட்டு – கட்டி வளர்க்காததே காரணம் என தவிசாளர் தெரிவிப்பு.!

வேலணையில் மீண்டும் அதிகரிக்கும் மாட்டு திருட்டு – கட்டி வளர்க்காததே காரணம் என தவிசாளர் தெரிவிப்பு.!

0
image

வேலணை பிரதேச சபையுன் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டு திருட்டு உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்து வருவதாகவும், திருட்டு தொடர்பில் பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைத்தபோதும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் காலதாமதம் செய்வதாகவும் சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (16) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே பிரதேசத்தில் அதிகரித்துள்ள மாட்டு திருட்டு தொடர்பில் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

வேலணை பிரதேசத்தில் கால்நடைகளை வளர்த்து வரும் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர் – 

வேலணையில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இதனால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்கள் பெரும் பாதிப்புகளையும் பொருளாதார இழப்பையும் எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் மாடுகள் காணாமல் போனமை தொடர்பில் உரிமையாளர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் மாடுகள் திருடிதவர்களது  ஆதாரங்களையும் பொதுமக்கள் பொலிஸாரிடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில் பின்னடிப்பதாகவும், முறைப்பாடுகளைப் பதிவு செய்வதிலும் விசாரணைகளை முன்னெடுப்பதிலும் காலதாமதம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் கவலை தெரிவிப்பதாக உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் சபையில் தெரிவித்தார்.

மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உள்ளூராட்சி நிறுவனமாக பிரதேச சபை செயற்படுவதால், கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினை தொடர்பில் சபையும் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதன்போது, மாடுகள் திருடப்படுவதைத் தடுப்பதற்காக அவற்றை முறையாகக் கட்டி வளர்க்க வேண்டும் என்ற வகையில் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் பதிலளித்திருந்தார்.

தவிசாளரின் இந்தப் பதில் பிரச்சினையின் தீவிரத்தன்மைக்கு உரிய தீர்வாக அமையாது எனக் கூறி பண்ணையாளர்கள் மத்தியில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

தமது வாழ்வாதாரத்தின் முக்கிய ஆதாரமாக கால்நடைகளை வளர்த்து வரும் நிலையில், மாடுகளை திருடிச் செல்லும் நபர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, மாடுகளை கட்டி வளர்க்குமாறு அறிவுறுத்துவது நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வாக அமையாது என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலணைப் பிரதேசத்தில் மாட்டு திருட்டு என்பது புதிதாக உருவாகியுள்ள பிரச்சினையல்ல எனவும், நீண்டகாலமாக கால்நடைகளை சட்டவிரோதமாக கடத்துதல், கட்டிவைக்கப்பட்ட நிலையில் திருடப்பட்ட மாடுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தல், இறைச்சியாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, தங்களது கால்நடைகள் காணாமல் போகும் சந்தர்ப்பங்களில் உரிமையாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொள்வதாகவும், சிலர் தமது குடும்ப வாழ்வாதாரத்திற்காக வளர்த்து வந்த மாடுகளையே இவ்வாறு இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கால்நடை வளர்ப்பு மூலம் வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஒரு மாடு என்பது வெறுமனே கால்நடை என்ற நிலையைத் தாண்டி அவர்களின் வாழ்வாதாரச் சொத்தாக காணப்படுகிறது. 

எனவே, மாடுகள் திருடப்படும் சம்பவங்களை சாதாரண சம்பவங்களாகக் கருதாமல், அவற்றின் பின்னணியில் செயற்படும் திருட்டுக் குழுக்கள் மற்றும் சட்டவிரோத கால்நடை வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோருகின்றனர்.

மேலும், திருடப்பட்ட கால்நடைகள் எவ்வாறு கொண்டு செல்லப்படுகின்றன, அவை எங்கு விற்பனை செய்யப்படுகின்றன, இறைச்சியாக்கப்படுகின்றனவா, அவற்றின் சட்டவிரோத விற்பனைக்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பன தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைக்கும் நிலையில், அவற்றை உரிய முறையில் பதிவு செய்து, சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு, குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவது பொலிஸாரின் பொறுப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வேலணை பிரதேச சபை, பொலிஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து கால்நடை திருட்டை கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: https://samugammedia.com/cattle-theft-on-the-rise-again-in-velanai-chairman-attributes-it-to-the-failure-to-tether-and-rear-the-animals-1789624155

NO COMMENTS

Exit mobile version