Home இலங்கை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு; நாமலுக்கு மீண்டும் சிறை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு; நாமலுக்கு மீண்டும் சிறை!

0
image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்காக எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு மற்றும் நிதித்தூய்தாக்கல் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் பசன் அமரசேன இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 23ஆம் திகதி வழங்கப்படும் எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்போது நீதிமன்றில் விடயங்களை முன்வைத்த பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார, இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதனடிப்படையில் குற்றச்சாட்டுகளை தாமதமின்றி தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் நீதிமன்றில் குறிப்பிட்டார்.

அத்துடன், விசாரணைகளுக்காக எயார்பஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் பல தடவைகள் இலங்கைக்கு வருகை தந்து வாக்குமூலங்களை வழங்கியுள்ளதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் தெரிவித்தார்.

முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சிறைச்சாலை அதிகாரிகளால் நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் பிணை தொடர்பான உத்தரவும் அறிவிக்கப்படவுள்ளது.

Source: https://samugammedia.com/srilankan-airlines-bribery-case-nama-sent-to-jail-again-1789551369

NO COMMENTS

Exit mobile version