Home இலங்கை வடக்கின் அபிவிருத்தி மற்றும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

வடக்கின் அபிவிருத்தி மற்றும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை

0
image

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, மக்களின் அடிப்படைத் தேவைகள், காணி விடுவிப்பு மற்றும் மீனவ சமூகத்தின் நலன்களை முன்னிறுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

காங்கேசன்துறையில் எண்ணெய்த் தாங்கி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

 அதேவேளை, நெடுந்தீவு மக்களின் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தொலைத்தொடர்புக் கோபுரமொன்றும் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மன்னார் வளைகுடா பிரதேசத்தில் எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், திருகோணமலையில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்புத் தாங்கிகளைப் புனரமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்களால் மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு தேவையான எரிபொருள் மானியங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த ஆட்சியாளர்களின் தலையீடுகளின் காரணமாக வடக்கு மாகாணத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டு, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள காணிகளையும், யுத்த காலத்தில் விவசாய நடவடிக்கைகள் இடம்பெறாததால் காடுகளாக மாறியுள்ள காணிகளையும் மீள மக்களிடம் கையளிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்த அகதிகள் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட சட்ட ஏற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சியினர் பொய்யான பிரசாரங்களையும் இனவாதக் கருத்துகளையும் சமூகத்தில் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட க. இளங்குமரன் எம்.பி., இவ்வாறான பிரசாரங்கள் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் மக்களின் பாதுகாப்பையும் பாதிக்கக்கூடியவை எனத் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், சமூக ஊடகங்கள் ஊடாக தூண்டப்பட்ட இனவாதக் கருத்துகளும் பிரசாரங்களும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய காரணிகளில் ஒன்றாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

எனவே, இனவாதத்தையும் பொய்யான பிரசாரங்களையும் முன்னெடுப்பதற்குப் பதிலாக, நாட்டின் அனைத்து மக்களினதும் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் வலியுறுத்தினார்.

Source: https://samugammedia.com/government-takes-measures-to-ensure-development-in-the-north-and-the-rights-of-the-people-1790126488

NO COMMENTS

Exit mobile version