நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி, 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இணைந்து ஆரம்பித்துள்ளன. இதற்கான நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் (05) மற்றும் நேற்று(06) இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 20 கைதிகளும், 7 சிறைச்சாலை அதிகாரிகளும் அடங்குவர் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். 23 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 54 கைதிகள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள 18 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் செயற்பாடுகளை முடக்குவதே இந்த வன்முறையின் பிரதான நோக்கமாக இருந்துள்ளது.
வன்முறைக்கு காரணமான சில கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையாக, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்த சுமார் 700 கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியின் பாதுகாப்பிற்காக பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
மேலும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளின் நலன் குறித்து விசாரிப்பதற்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது, காயமடைந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் அவர்களின் குணமடைதலுக்குத் தேவையான வசதிகள் குறித்து வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார்.
இது இப்படி இருக்க நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர ஒத்திவைப்பு விவாதமொன்றைக் கோரி சபாநாயகருக்குக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
குறித்த கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், சுஜீவ சேனசிங்க, கிங்ஸ் நெல்சன், ரோஹிணி விஜேரத்ன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
