Home இலங்கை 13 வயது பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது

13 வயது பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம்: 35 வயது திருமணமான நபர் கைது

0
image

புத்தளம் – மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது  சிறுமியை பெற்றோரின் பராமரிப்பிலிருந்து அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாவெவ – குடாவெவ பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்ததுடன், அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கும் சென்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைப் பயன்படுத்தி சிறுமியுடன் நெருக்கமாகப் பழகிய சந்தேகநபர், அவரை காதல் வலையில் சிக்கவைத்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை 5ஆம் திகதி, “கடற்கரைக்குச் செல்வோம்” எனக் கூறி சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சந்தர்ப்பங்களில் அதே விடுதிக்கு அழைத்துச் சென்று சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது, மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி முன்னிலையில் சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம் சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரணவீர தலைமையிலான குழுவினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/13-year-old-schoolgirl-abused-35-year-old-married-man-arrested-1785387729

NO COMMENTS

Exit mobile version