வியட்நாமின் ஹோ சி மின் (Ho Chi Minh) நகரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வியட்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
வியட்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான VJC1875 என்ற விமானத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட மொத்தம் 143 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஒரு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு அது செயலிழந்தமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, விமானத்தை சென்னைக்குத் திருப்புவதற்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையினால் உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது.
விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இரவு 9.55 மணியளவில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதன்போது தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அவசர சேவை நோயாளர் காவு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.
இந்நிலையில், இரவு 10.27 மணியளவில் குறித்த விமானம் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, அதில் பயணித்த 143 பேரும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
