2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியபோது நிதியை தவறாகப்
பயன்படுத்தியதாக எழுந்த ஊழல் முறைப்பாடுகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர்
குமார ஜெயக்கொடி மீது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்
ஆணையகம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டின்படி 8 மில்லியன் ரூபாய்களை முறைகேடு செய்ததாக அமைச்சர்
மற்றும் இருவர் மீது மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட கேள்விப்பத்திரத்தை வழங்கிய
கேள்விப்பத்திர சபையின் தலைவராக ஜெயக்கொடி பணியாற்றிய போதே இந்த ஊழல்
இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
தற்போதைய அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமைச்சர் குமார ஜெயக்கொடி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பி, உரக்
கூட்டுத்தாபனத்தில் நிதி மோசடி தொடர்பாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் தேசிய
மக்கள் சக்தியின் அமைச்சரவையில் பணியாற்றுவதாகக் கூறியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
