Home இலங்கை 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை – மலையக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை – மலையக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

0
image

20 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் (SLSPC), ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (JEDB) மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய மூன்று அரச பெருந்தோட்ட நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மற்றும் தற்போது பணியாற்றி வரும் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சுமார் 4.5 பில்லியன் ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தைச் சேர்ந்த சுமார் 3,000 தொழிலாளர்களுக்கு 1,961 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையும், ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையைச் சேர்ந்த 6,123 தொழிலாளர்களுக்கு 2,024 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையும் வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 1,000 தொழிலாளர்களுக்கு 503 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், மொத்தமாக சுமார் 4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 10ஆம் திகதி கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/action-to-provide-payments-pending-for-20-years—good-news-for-the-hill-country-people-1788927491

NO COMMENTS

Exit mobile version