Home இலங்கை 2027 வரவு–செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் ஜனாதிபதி உறுதி

2027 வரவு–செலவுத் திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் ஜனாதிபதி உறுதி

0
image

ஜனநாயகத்தை இல்லாதொழித்துவிட்டு ஒரு நாடாக எவராலும் முன்னேற்றமடைய முடியாது எனவும், தனது இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராகத் எந்தச் செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“சட்டத்தின் ஆட்சியை முன்னிலைப்படுத்தியே எமது அரசு செயற்பட்டு வருகின்றது. ஆட்சியாளர்கள் தவறிழைக்கும்போது அதனைச் சுட்டிக்காட்டும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது.

கடந்த கால அரசுகளின் காலத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிறுவனங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வெள்ளை வான் கலாசாரம் நடைமுறையில் இருந்தன.

எமது இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்துக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அனைவரும் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு அமைவாகவே செயற்பட வேண்டும்.

நானும் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுகின்றேன். கடந்த காலங்களில் சட்டத்துக்கு  அப்பாற்பட்டுச் செயற்பட்டவர்களே தற்போது சட்டத்துக்கு உட்பட மறுத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

நிறைவடைந்த எமது இரண்டு ஆண்டு காலப்பகுதியில் ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழல் காரணமாகவே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. இதனால் மக்கள் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிட்டது.

ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், கடந்த கால அரசுகளின் ஊழல் நடவடிக்கைகள் மூலம் சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றவர்களே அதற்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றனர்.

அரசுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் அவ்வப்போது கூட்டணிகளை அமைத்து வருகின்றனர். அவற்றை அரசுக்கு எத்தகைய சவாலாகவும் கருதவில்லை.

மேலும், வெளியக ரீதியாக ஏற்பட்ட சவால்களைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம்.

பொருளாதாரத்தின் உச்ச பயனை மக்களுக்கு வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படவோ அல்லது இரத்துச் செய்யப்படவோ உள்ளன.

மீண்டெழும் செலவுகளுக்காக 2 ஆயிரம் பில்லியன் ரூபா வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படுவதுடன், திறைசேரியைப் பாதுகாத்துக்கொண்டே அனைத்து அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்படும்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எனது பதவிக் காலத்துக்குள் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

மக்கள் எமது அரசின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளனர். போலியான குற்றச்சாட்டுகள் மூலம் அந்த நம்பிக்கையை எவராலும் சிதைக்க முடியாது.” – என்றார்.

Source: https://samugammedia.com/2027-budget-will-be-beneficial-to-the-people-president-assures-1789987841

NO COMMENTS

Exit mobile version