ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் (BASL) இடையிலான உயர்நிலைச் சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இக்கலந்துரையாடலில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித் துறை மறுசீரமைப்புகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டது.
ஜனாதிபதி தெரிவித்த முக்கிய அம்சங்கள்:
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் தீர்மானம் எந்தவொரு தனிப்பட்ட நபரையோ அல்லது குழுவையோ இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டதல்ல; இது நாட்டின் பொதுநலன் மற்றும் நீதித் துறையின் கட்டமைப்புசார் மறுசீரமைப்பிற்கான ஒரு முக்கியப் படியாகும்.
நீதியை நிலைநாட்டுவது என்பது நீதிமன்றங்களோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. எனவே, சட்டமா அதிபர் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் துறை மற்றும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் ஆகியவற்றின் மனிதவள கட்டமைப்புகள் கணிசமாக அதிகரிக்கப்படும்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சேவைகள் மாவட்ட மட்டத்திற்கு விரிவுபடுத்தப்படும். மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையில் மாகாண மட்டத்திற்கு கொண்டு செல்ல உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
மேல்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, நீதிமன்றங்களுக்குத் தேவையான பௌதிக வசதிகள் முழுமையாக வழங்கப்படும்.
நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக தமக்கு கொள்கை ரீதியான எதிர்ப்புகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், இதுகுறித்து மேலும் கலந்துரையாடி பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவது சிறப்பு எனப் பரிந்துரைத்தனர்.
இச்சந்திப்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
