Home இலங்கை 22ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் – பாராளுமன்றத்தை முற்றுகையிட அழைப்பு

22ஆவது திருத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் – பாராளுமன்றத்தை முற்றுகையிட அழைப்பு

0
image

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் நாடளாவிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக கம்பஹா தொகுதி அமைப்பாளர் வருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த வருண ராஜபக்ஷ,

நாட்டின் ஜனநாயகத்தை ஒழித்து, சட்டத்தின் ஆட்சியை சீர்குலைத்து, சர்வாதிகார ஒற்றைக்கட்சி ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்தத் திருத்தத்திற்கு அரசாங்கத்திற்குள்ளேயே பல தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்து வருவதன் மூலம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமை தெளிவாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய லால் விஜேநாயக்க மற்றும் உபுல் குமாரப்பெரும ஆகியோரும் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய இதுவரை 22ஆவது திருத்தம் தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்திற்குள் தோற்கடிக்கும் பொறுப்பு பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்க உறுப்பினர்களுக்கே உள்ளதாகவும், பாராளுமன்றத்திற்கு வெளியே அதற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஏற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் 24ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஜனநாயக மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுமாறு அனைத்து மக்களுக்கும், குறிப்பாக முறைமை மாற்றத்தை கோரி காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Source: https://samugammedia.com/peoples-protest-against-the-22nd-amendment–call-to-besiege-the-parliament-1789533347

NO COMMENTS

Exit mobile version