எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அதிகாரத்துக்கு வந்தால் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை மீள மாற்றுவதாகத் தெரிவித்துள்ளமை அவரது குறுகிய சிந்தனையையே வெளிப்படுத்துகின்றது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் நாடாளுமன்றத்தில் மிகவும் முக்கியமானவராவார். எனினும், அவர் அதிகாரத்துக்கு வந்த பின்னர் 22ஆவது திருத்தச் சட்டத்தை மீள மாற்றுவதாகக் கூறுவது தொடர்பில் நாட்டு மக்கள் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறு மாற்றுவதென்பது உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதா? அல்லது நீதிமன்றங்களின் கட்டமைப்பை மீண்டும் சுருக்குவதா? ஒரு நாட்டின் நீதித்துறை கட்டமைப்பைச் சுருக்குவதற்காகவா ஜனாதிபதி ஒருவரை அதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டும்?
மாறாக, நீதித்துறையை விரிவுபடுத்தி, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, நாட்டில் அனைவருக்கும் சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்துவதே அரச தலைவரின் பிரதான பொறுப்பாக இருக்க வேண்டும்.
இதுவரை நாட்டில் அதிகாரத்தை வகித்த அரசியல் கட்சிகள் தமது சொந்த அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்வைத்துள்ளன. 18ஆவது மற்றும் 20ஆவது அரசமைப்புத் திருத்தங்கள் அவ்வாறான நோக்கங்களுடனேயே கொண்டுவரப்பட்டன.
ஆனால், 22ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தையோ அல்லது ஜனாதிபதியின் பதவிக் காலத்தையோ நீடிப்பதற்காகக் கொண்டுவரப்படவில்லை. மாறாக, நாட்டின் நலன், நீதித்துறையின் விரிவாக்கம், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் ஆகிய உயரிய நோக்கங்களுடனேயே இது கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் ஊடாக நீதித்துறையை விரிவுபடுத்தி மக்களுக்கு விரைவான நீதியை வழங்குவதற்குரிய சூழலை உருவாக்குவதே அரசின் பிரதான நோக்கம். – என்றார்.
