22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை அமைப்பு (திருத்தச்) சட்டமூலத்தை நிறைவேற்றுவது, அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் ஒரு பகுதியை நிறைவேற்றும் நடவடிக்கை என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று குறித்த இரண்டு சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
‘வளமிக்க நாடு – அழகான வாழ்க்கை’ என்ற கொள்கைப் பிரகடனத்துக்கு அமைய, நியாயமான மற்றும் சமமான நீதிப் பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை, செயல்திறன், சுதந்திரம் மற்றும் மக்கள் நம்பிக்கை ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் நீதித்துறை அமைப்பை முன்னெடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாக்குறுதியின் ஒரு பகுதியாகவே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும் நீதித்துறை அமைப்பு (திருத்தச்) சட்டமூலமும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு நீதித்துறை மாத்திரம் திறம்பட செயற்படுவது போதுமானதல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்க அமைப்பின் பல்வேறு பகுதிகளிலும் செயல்திறனை ஏற்படுத்துவதன் மூலமே சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த முடியும் எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
